IND vs AUS, 3rd T20I: எல்லிஸ் பெர்ரி, ஹாரிஸ் காட்டடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்துமுடிந்த 2 போட்டியிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீராங்கனைகள் கேப்டன் அலிசா ஹீலி, தஹிலா மெக்ராத் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த பெத் மூனி - எல்லிஸ் பெர்ரி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் கடந்த இரு போட்டிகளிலும் அரைசதம் கடந்த பெத் மூனி இப்போட்டியிலும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஆஷ்லே கார்ட்னரும் 7 ரன்களோடு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி - கிரேஸ் ஹாரிஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்டு அசத்தினர். இதனால் 150 ரன்களைக் கூட தாண்டாது என நினைத்த ஆஸ்திரேலிய அணி 17ஆவது ஓவரிலேயே 150 ரன்களைக் கடந்தது.
இதில் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த எல்லிஸ் பெர்ரி 47 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அனபெல் சதர்லாந்த் ஒரு ரன்னில் அவுட்டாக, அரைசத்தை விளாச வெறிகொண்டு விளையாடிய கிரேஸ் ஹாரிஸும் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 41 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகல் சோபிக்க தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா, ரேனுகா சிங், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.