IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த இந்தியா; அதிரடி காட்டும் ரோஹித் - கோலி!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஜடேஜா மற்றும் அஸ்வினின் சுழலில் சிக்கி 177 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையுமே தலா ஒரு ரன்னுக்கு முறையே சிராஜ் மற்றும் ஷமி வீழ்த்தினர். 2 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு, அதன்பின்னர் மார்னஸ் லபுஷேனும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
மூன்றாவவது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடி 49 ரன்கள் அடித்த லபுஷேனை வீழ்த்திய ஜடேஜா, அதற்கடுத்த பந்திலேயே மேட் ரென்ஷாவையும் வீழ்த்தினார். மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் அடித்திருந்தது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளைக்கு பின் ஜடேஜா மளமளவென ஆஸ்திரேலிய வீரர்களை வீழ்த்தினார். லபுஷேன்(49), ரென்ஷாவை(1) தொடர்ந்து ஸ்மித்தையும் 37 ரன்களுக்கு க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் ஜடேஜா.
அதன்பின்னர் அதிரடியாக ஆடி 33 பந்தில் 36 ரன்கள் அடித்த அலெக்ஸ் கேரியை வீழ்த்திய அஷ்வின், கம்மின்ஸையும் 6 ரன்களுக்கு வீழ்த்தினார். ஹேண்ட்ஸ்கோம்ப்பை 31 ரன்களுக்கு வீழ்த்திய ஜடேஜா, டாட் மர்ஃபியை டக் அவுட்டாக்கி, 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டை அஷ்வின் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முழங்கால் அறுவை சிகிச்சையால் கடந்த பல மாதங்களாக ஆடாத ஜடேஜா, தனது கம்பேக் டெஸ்ட்டில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 76 ரன்களை சேர்த்தனர். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் ராகுல் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா 56 ரன்களுடனும், அவருடன் அஷ்வினும் ரன்கள் ஏதுமின்றி இன்னிங்ஸைத் தொடங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது. பின்னர் 23 ரன்கள் எடுத்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சட்டேஷ்வர் புஜாரா 7 ரன்களிலும் மர்ஃபி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து ரோஹித்துடன் இணைந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. இதில் ரோஹித் சர்மா 85 ரன்களுடனும், விராட் கோலி 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டாட் மர்ஃபி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.