IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி அசத்தல்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தர். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், அபிஷேக் சர்மா 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் சஞ்சு சாம்சனுடன் இணைந்த சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் தொடர்ந்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 23 ரன்களில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
அத்துடன் நிற்காத இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 111 ரன்களைக் குவித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 75 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரியான் பராக் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே சென்றது.
இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்கள்பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 34 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரியான் பராக் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்களைக் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் தொடக்க வீரர் பர்வேஸ் ஹொசைன் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தன்ஸித் ஹசன் 15 ரன்களிலும், அவரைத்தொட்ர்ந்து நஜ்முல் ஹொசைன் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, வங்கதேச அணி 59 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 42 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாவ்ஹித் ஹிரிடோய் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தாவ்ஹித் ஹிரிடோய் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.