BAN vs IND, 1st Test: சரிவிலிருந்து மீட்ட புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர்!
சட்டோகிராமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு ராகுலும் ஷுப்மன் கில்லும் 41 ரன்கள் சேர்த்தார்கள். எனினும் ஷுப்மன் கில் 20 ரன்களுக்கும் ராகுல் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு விராட் கோலியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. புஜாரா 12, ரிஷப் பந்த் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இன்று 4,000 ரன்களைப் பூர்த்தி செய்த ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50ஆவது சிக்ஸரை அடித்தார். 54 இன்னிங்ஸில் இந்த எண்ணிக்கையை அடைந்து குறைந்த இன்னிங்ஸில் 50 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.
அதன்பின் 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து மெஹிதி ஹசன் பந்துவீச்சில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். இதையடுத்து இன்றும் தனது வழக்கமான நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தார் புஜாரா.
பந்த் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் புஜாராவுக்கு நல்ல இணையாக விளங்கினார். இருவரும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.
இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இதில் புஜாரா 42 ரன்களிலும், ஸ்ரேய்ஸ் ஐயர் 41 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.