என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் - ரிஷப் பந்த்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் (125* ரன்கள்), ஹர்திக் பாண்டியா (71 ரன்கள், 4 விக்கெட்) எடுத்து அசத்த, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பண்டும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பண்டியாவும் கைப்பற்றினர்.
போட்டி முடிவுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்திக் பண்டியா, ''எனக்கு ஷார்ட் பந்துகள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் ஒரு விக்கெட் வீழ்த்துவது 6 சிக்ஸர்கள் அடிப்பதற்கு சமம். ஒரு பவுலராக நான் வெட்கமற்றவன் என்று நான் எப்போதும் உணர்கிறேன். நான் எவ்வளவு தூரம் அடிபட்டாலும் கவலைப்பட மாட்டேன். ரிஷப் பண்டின் திறமையை நாங்கள் அனைவரும் அறிவோம். இறுதியாக இன்று அவர் நல்ல சூழ்நிலையில் விளையாடினார். பார்ட்னர்ஷிப் எங்களது ஆட்டத்தை மாற்றியது. ரிஷப் பண்ட் ஆட்டத்தை முடித்த விதமும் சிறப்பு" என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ரிஷப் பந்த் கூறுகையில், "இந்த போட்டியில் என்னுடைய பங்களிப்போடு இந்திய அணி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய இந்த ஆட்டத்தை நான் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். இந்த போட்டியின் முதல் பந்திலிருந்தே நான் மிகவும் போகஸ் உடன் விளையாடினேன். அணி ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கும்போது பேட்டிங் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில் இந்த போட்டியிலும் நான் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். எப்போதுமே இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. அதே வேளையில் இங்கு இருக்கும் சூழ்நிலையும், ரசிகர்களின் ஆதரவும் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய போட்டிகளில் விளையாடுவதன் மூலம் நிறைய அனுபவம் கிடைக்கும்.
அந்த வகையில் நான் தற்போது நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிக அருமையாக இருந்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக பந்து வீசினார்கள்” என தெரிவித்தார்.