இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் எடுத்தனர்.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அபாரமான தொடக்கத்தை கொடுத்ததுடன் சதமடித்தும் அசத்தினார். இப்போட்டியில் பென் டக்கெட் 153 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

Advertisement

இதன்மூலம் 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்தார்.  அதன்பின் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 104 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹைர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது.

இதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 03 ரன்களுடனும் தொடந்தனர்.  இதில் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் இப்போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 91 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவும் ஆட்டமிழந்தார். 

அதன்பின் மீண்டும் களத்திற்கு வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளாக விளாசித்தள்ளினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிக்சர்களாக விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

மேலும் இத்தொடரில் ஜெய்ஸ்வால் விளாசும் இரண்டாவது இரட்டை சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 பவுண்டரி, 12 சிக்சர்கள் என 214 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 68 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

Advertisement

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்திய பென் டக்கெட் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களில் ஸாக் கிரௌலியும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் அடுத்தடுத்து ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களிலும், ரெஹான் அஹ்மத் ரன்கள் ஏதுமின்றியும், பென் ஃபோக்ஸ் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 16 ரன்களிலும் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் அதிரடியாக விளையாடிய மார்க் வுட் 15 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களைச் சேர்த்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 122 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News