IND vs ENG, 4th Test: ஷுப்மன், ஜுரெல் சிறப்பான ஆட்டம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

Updated: Mon, Feb 26 2024 14:02 IST
IND vs ENG, 4th Test: ஷுப்மன், ஜுரெல் சிறப்பான ஆட்டம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா! (Image Source: Google)

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய அந்த அணியில் ஜோ ரூட் சதமடித்து அசத்த, முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது.  இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோ ரூ 122 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து  முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் அரைசதம் அடித்ததை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 307 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பென் டக்கெட் 15 ரன்களிலும், ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த் ஸாக் கிரௌலி - ஜானி பேர்ஸ்டோவ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஸாக் கிரௌலி விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜானி பேர்ஸ்டோவ் 30, டாம் ஹார்ட்லி 7, ஒல்லி ராபின்சன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் 17 ரன்களில் பென் ஃபோக்ஸும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன்கள் ஏதுமின்றியும் என அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிவரும் இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் 55 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.  பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர். பின் ரவீந்திர ஜடேஜா 4 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஷுப்மனுடன் இனைந்த துருவ் ஜுரெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். 

மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த ஷுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் ஷுப்மன் கில் 52 ரன்களையும், துருவ் ஜுரெல் 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை