IND vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகும் ஷுப்மன் கில்; சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு?
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைடாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய கையுடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து அணியோ இலங்கை அணிக்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்ட் தோல்விகளுடன் தொடரை இழந்து கையோடு இப்போட்டியில் விளையாடவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாள்களாக பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஷுப்மன் கில்லிற்கு கழுத்து மற்றும் பின் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது இடத்தில் மற்றொரு இளம் வீரரான சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த ஷுப்மன் கில், வங்கதேச டெஸ்ட் தொடரின் போது சதமடித்து கம்பேக் கொடுத்திருந்தார். ஆனாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெரிதளவில் சோபிக்க் தவறிய அவர், நியூசிலாந்து தொடரில் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறுபக்கம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்ஃப்ராஸ் கான், அதன்பின் கேஎல் ராகுலின் வருகை காரணமாக பிளேயிங் லெவனின் தனது இடத்தை இழந்திருந்தார். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அதனை அவர் சரியாக பயன்படுத்துவதுடன், தனது இடத்தையும் தக்கவைத்துகொள்ள முயற்சிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
Also Read: Funding To Save Test Cricket