IND vs NZ, 2nd Test: வாஷிங்டன் சுழலில் சுருண்டது நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களைச் சேர்த்திருந்த நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதமும், அவரைத்தொடர்ந்து 18 ரன்களில் வில் யங்க்கும் என விக்கெட்டுகளை இழந்தன்ர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமாக விளையாடிய டெவான் கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 11 பவுண்டரிகளுடன் 76 ரன்களை எடுத்திருந்த நிலையில் டெவான் கன்வே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில், அவருடன் இணைந்து விளையாடிய ரச்சின் ரவீந்திராவும் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 65 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் மறுமுனையில் களமிறங்கிய டேரில் மிட்செல் 18 ரன்களுக்கும், டாம் பிளெண்டல் 3 ரன்களுக்கும், நட்சத்திர வீரர் கிளென் பிலீப்ஸ் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அதிரடியாக விளையடும் முனைப்புடன் களமிறங்கிய மிட்செல் சாண்ட்னர் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய டிம் சௌதீ 5 ரன்களுக்கும், அஜாஸ் படேல் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து யஷஸ்வி ஜெய்வாலுடன் இணைந்த ஷுப்மன் கில் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், ஷுப்மன் கில் 10 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 243 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.