IND vs NZ, 3rd ODI: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!

Updated: Tue, Jan 24 2023 21:07 IST
Image Source: Google

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்தூரில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 212 ரன்கள் சேர்த்தனர். ஒரே ஓவரில் இருவரும் சதம் பதிவு செய்து மாஸ் காட்டினர்.

அதன்பின் ரோஹித் சர்மா 85 பந்துகளில் 101 ரன்கள் குவித்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில், 78 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன், கோலி, சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அந்த சமயத்தில் இந்திய அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை.

இதையடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் இணைந்து 54 ரன்களுக்கு 7ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தாக்கூர், 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃபி, பிளைர் டிக்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வழக்கம் போல தொடக்க வீரர் ஃபின் ஆலன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - ஹென்றி நிக்கோலஸ் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் 42 ரன்களில் நிக்கோலஸ் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டெவான் கான்வே சதமடித்து அசத்தினார். இது அவரது 3ஆவது ஒருநாள் சதமாகும். அதன்பின் 12 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 138 ரன்களைச் சேர்த்திருந்த டெவான் கான்வே, உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் 24, கேப்டன் டாம் லேதம் 0, கிளென் பிலீப்ஸ் 5 ரன்கள் என அடுத்தடுத்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். அதன்பின் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த லோக்கி ஃபர்குசன், ஜேகப் டாஃபி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதன்பின் இறுதிவரை போராடிய மிட்செல் சாண்ட்னர் 34 ரன்கள்  சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதன்மூலம் ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை