IND vs NZ, 3rd T20I: ஷுப்மன் கில் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹாலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
அதன்படி இந்திய அணிக்கு இஷான் கிஷான் - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் வழக்கம் போல இஷான் கிஷான் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - ராகுல் திரிபாதி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்ட ராகுல் திரிபாதி தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் இருந்த ஷுப்மன் கில் அரைசதத்தைப் பதிவு செய்ய, மறுமுனையில் களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 24 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் 54 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்து அசத்தியுள்ளார். அதேபோல் டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் என அனைவித்த கிரிக்கெட்டிலும் சதமடித்த 5ஆவது இந்திய வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.
இதையடுத்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியாவும் 17 பந்துகளில் 30 ரன்களை எடுத்த ஆட்டமிழந்தார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 12 பவுண்டர், 7 சிக்சர்களை பறக்கவிட்டு 126 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல், பிளைர் டிக்னர், இஷ் சோதி, டேரில் மிட்செல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.