IND vs SA, 3rd T20I: குல்தீப், வாஷி, ஷபாஸ் அபாரம்; 99 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

Updated: Tue, Oct 11 2022 16:39 IST
IND vs SA: Siraj & Spinners Shine As India Bowl Out South Africa For 99 In Decider 3rd ODI (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக அரைமணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் முக்கிய போட்டி இன்று தொடங்கியது.

இந்தியாவை விட தென் ஆப்பிரிக்க அணிக்கு தான் இது முக்கிய போட்டியாகப்பார்க்கபட்டது. காரணம் , டெஸ்ட் சாம்பியன்ஷிப் போல், ஒருநாள் சாம்பியன்ஷிப புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 11ஆவது இடத்தில் உள்ளது. முதல் 8 இடங்களை பிடிக்கும் அணியே, நேரடியாக அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். 

இதனால், தென்னாப்பிரிக்க அணி தகுதி சுற்றில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றைய வெற்றி தென்னாப்பிரிக்கா அணிக்கு மிகவும் முக்கியம் என கருதப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை வரை கன மழை பெய்தது. இதனால், அருண் ஜெட்லி மைதானம் ஈரப்பதத்துடன் காட்சி அளித்தது. மைதானத்தில் ஆங்காங்கே இருக்கும் நீரை வெளியேற்றும் முயற்சியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் டாஸ் மதியம் 1.40 மணிக்கு தான் வீசப்பட்டது.

அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியின் இன்றையப் போட்டிக்கான கேப்டனாக டேவிட் மில்லர் செயல்பட்டார்.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க வீரர் குயின்டன் டி காக் 6 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மாலன் (16), ரீஸா ஹெண்டரிக்ஸ் (9) என அடுத்தடுத்து முகமது சிராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தனர். 

அதனைத்தொடர்ந்து டேவிட் மில்லரின் விக்கெட்டையும் வாஷிங்டன் சுந்தர் கைப்பற்ற, சிறப்பாக விளையாடிய 34 ரன்களைச் சேர்த்த ஹெண்ட்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம் ஆகியோரது விக்கெட்டுகளை ஷபாஸ் அஹ்மத் கைப்பற்றி அசத்தினார். 

பின்னர் ஆண்டிலே பஹ்லுக்வாயோ, மார்க்கோ ஜான்சென், ஃபோர்டுன், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோரது விக்கெட்டுகளைக் குல்தீப் யாதவ் கைப்பற்றி மிரட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 99 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி தங்களது மிகக்குறைந்த ஸ்கோரையும் பதிவுசெய்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன், ஷபாஸ் அஹ்மத், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை