IND vs SL, 1st Test: வெற்றியுடன் கணக்கை தொடங்க காத்திருக்கும் இந்தியா!

Updated: Thu, Mar 03 2022 19:03 IST
Image Source: Google

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியா -இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மொஹாலியில் நாளை (4ஆம் தேதி) தொடங்குகிறது.

ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்கும் முதல் டெஸ்ட் இதுவாகும். தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து 3 வடிவிலான போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கடைசியாக தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்டில் விளையாடி (டிசம்பர்-ஜனவரி) 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. சொந்த மண்ணில் கடைசியாக நியூசிலாந்துடன் (நவம்பர்-டிசம்பர்) டெஸ்டில் விளையாடியது. 2 போட்டி கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையே கடைசியாக 2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்தது. சொந்த மண்ணில் நடந்த 3 போட்டி கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவியில் இந்த டெஸ்ட் எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதேபோல் விராட் கோலிக்கும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் அவருக்கு இது 100ஆவது டெஸ்டாகும்.

புஜாரா, ரஹானே இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக முதல் முறையாக இந்திய அணி டெஸ்டில் விளையாட உள்ளது. இதனால் புஜாராவின் 3ஆவது வரிசையிலும், ரஹானேவின் 5ஆவது இடத்திலும் யார் இடம் பெறப் போகிறார்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

புஜாரா, ரஹானே இடத்துக்கான போட்டியில் சுப்மன் கில், விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இருக்கிறார்கள். ரோஹித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். 3ஆவது வரிசையில் சுப்மன் கில் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பெறலாம். 

விராட்கோலி எப்போதுபோல 4ஆவது வரிசையில் விளையாடுவார். 5ஆவது வீரராக ரி‌ஷப் பந்த் விளையாடலாம். ஒருவேளை அவர் தனது வரிசையான 6ஆம் நிலையில் ஆடினால் விஹாரிக்கு 5-வது இடம் கிடைக்கலாம்.

சுழற்பந்து வீரர்களில் ஜடேஜா, அஸ்வின், வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது ‌ஷமி , உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ் இடம்பெறுவார்கள். குல்தீப் யாதவ் இடம்பெற்றால் ஒரு வேகப்பந்து வீரர் கழற்றி விடப்படுவார்.

20 ஓவர் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இலங்கை அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட முயற்சிக்கும். கருணாரத்னே தலைமையிலான அந்த அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 45ஆவது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 44 போட்டியில் இந்தியா 20 போட்டிகளிலும், இலங்கை 7போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும்17 டெஸ்ட் போட்டிகள் டிரா ஆனது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை