IND vs SL, 2nd T20I: மெண்டிஸ், ஷனகா காட்டடி; இந்தியாவுக்கு 207 ரன்கள் இலக்கு!

Updated: Thu, Jan 05 2023 20:45 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புனேவிலுள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் ராகுல் திரிபாதி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் கடந்த போட்டியில் விளையாடிய ஹர்ஷல் படேலுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு குசால் மெண்டிஸ் - பதும் நிஷங்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிஷங்கா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் குசால் மெண்டிஸ் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதன் காரணமாக 27 பந்துகளில் அவர் அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் 52 ரன்கள் எடுத்த நிலையில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பனுகா ராஜபக்ஷா 2 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்காவும் 33 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் சரித் அசலங்கா 19 பந்துகளில் 37 ரன்களை குவித்து உம்ரான் மாலிக்கிடம் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா, வநிந்து ஹசரங்கா இணை சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தசுன் ஷனகா - கருணரத்னே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷனகா பவுண்டரியும், சிக்சர்களையும் விளாசித்தள்ளினார். அதற்கேற்றவாரே 19ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் இரண்டு நோ பால்களையும் வீசினார். மேலும் இப்போட்டியில் அவர் 5 நோ பால்களை வீசியதுடன் ரன்களையும் வாரி வழங்கினார்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய தசுன் ஷனகா 20 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தசுன் ஷனகா 22 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 56 ரன்களைக் குவித்தார். இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை