IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், 20 வீரர்கள் கொண்ட புதிய இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. ஒரே நேரத்தில் இரண்டு இந்திய சர்வதேச அணிகள் தற்போது விளையாடி வருவது வரலாற்றில் அரிதாக நடக்கும் நிகழ்வாகும்.
முன்னதாக, இந்தியா - இலங்கை தொடர், ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் நிரோஷன் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், இத்தொடர் ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
அதன்படி முதல் ஒருநாள் போட்டி வரும் ஜுலை 18ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23ஆம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25ஆம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29ஆம் தேதியும் நடைபெறும் என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியின் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் என பல டி20 ஸ்பெஷலிஸ்டுகள் அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை ராகுல் டிராவிட் மற்றும் தவான் ஏறக்குறைய முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா களமிறங்குவது உறுதியாகியுள்ளது. மிடில் ஆர்டரில் சூர்ய குமார் யாதவ், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா ஆகியோரும், பந்துவீச்சில் புவனேஷ் குமார், நவ்தீப் சைனி, யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.