IND vs WI, 1st ODI: வெஸ்ட் இண்டீஸை ஊதித்தள்ளியது இந்தியா!

Updated: Sun, Feb 06 2022 19:43 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக முடிவெடுத்தது.

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதிலும் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரின் பந்துகளை வெஸ்ட் இண்டீஸ் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த அணியில் ஜேசன் ஹோல்டர் மட்டும் பொறுப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் 44 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். 

அதன்பின் 60 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க அடுத்து வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி 8 ரன்களில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சிலேயே விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்தும் அதிரடியாக விளையாட முயற்சித்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் சூர்யகுமார் யாதவ் - அறிமுக வீரர் தீபக் ஹூட இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. 

இதன்மூலம் இந்திய அணி 28 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை