இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஈடன் கார்டன்ஸில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் - ருதுராஜ் கெய்க்வாட் இணை களமிறங்கியது.
இதில் 4 ரன்களில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 25 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, 34 ரன்களோடு இஷான் கிஷானும் வெளியேறினார். நான்காவது வீரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 7 ரன்களோடு நடையைக் கட்டினார்.
இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - வெங்கடேஷ் ஐயர் இணை பவுண்டரிகளாக பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர்.
இதில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 35 ரன்களையும் சேர்த்தனர்.