‘இது தற்காலிக பரிசோதனையே’ - பேட்டிங் மாற்றம் குறித்து ரோஹித் சர்மா!

Updated: Thu, Feb 10 2022 10:49 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்தது. இதில் சூர்யகுமார் யாதவ் 64 ரன்களைச் சேர்த்தார். 

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர்களில் 193 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 44 ரன்னில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மிகவும் அபாரமாக பந்து வீசி 12 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். 6- வது போட்டியில் ஆடிய அவருக்கு இது சிறந்த பந்துவீச்சாகும். 

இதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக புனே மைதானத்தில் 54 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், யசுவேந்திர சாஹல், வாஷிங் டன் சுந்தர், தீபக்ஹூடா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மாவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிஷப் பந்த் தொடக்க வீரராக களம் இறங்கினார். இந்த பரிசோதனை தோல்வியில் முடிந்தது. மிடில் ஆர்டரில் விளையாடும் ரிஷப் பந்த் 34 பந்துகளை சந்தித்து 18 ரன்களே எடுத்தார். இதேபோல ரோஹித் சர்மாவும் எளிதில் ஆட்டம் இழந்தார். தொடக்க ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் ரிஷப் பந்த் தொடக்க வீரரராக விளையாடியது தற்காலிக பரிசோதனையே அது நிரந்தரம் இல்லை என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “மாறுபட்ட முறையில் சிந்தனை செய்து ரி‌ஷப் பந்த் தொடக்கவீரராக களம் இறக்கப்பட்டார். இதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றிருப்பார்கள். இது தற்காலிக முயற்சியே நிரந்தரமானது அல்ல. அடுத்த போட்டியில் ஷிகர் தவான் விளையாடுவார். ஒரே ஒரு போட்டிக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது சிறந்த உணர்வாக கருதுகிறேன். அவர்கள் சில வகைகளில் சவால் கொடுத்தனர். ராகுலும், சூர்யகுமார் யாதவும் நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். இருவரிடமும் நல்ல முதிர்ச்சி தெரிந்தது.

அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இப்படி ஒரு அபாரமான பந்துவீச்சை நான் பார்த்ததில்லை. 6ஆவது பந்து வீச்சாளராக தீபக் ஹூடா பயன்படுத்தப்பட்டார். எப்போதுமே பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது அவசியமானது” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை