வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களில் மாற்றங்களை செய்த பிசிசிஐ!

Updated: Tue, Aug 13 2024 22:36 IST
Image Source: Google

இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதியுடன் முடிவடைவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 27ஆம் தேதி கன்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 06ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெறும் தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக. அப்போட்டியை குவாலியருக்கு மாற்றியமைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெறும் இடத்தையும் மாற்றியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்தது. ஆனால் இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கம் தர்மசாலா மைதானத்தி உள்ள வீரர்கள் ஓய்வரை மற்றும் மைதான சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதன் காரணமாக இந்த டி20 போட்டியானது அதே நாளில் குவாலியரில் நடைபெறவுள்ளது. 

குவாலியரில் நடைபெறும் இந்த போட்டியனது, நகரின் புதிய மைதானமான ஸ்ரீமந்த் மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகவும் அமையவுள்ளது. மேலும் 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் போட்டிக்கு பிறகு இங்கு நடைபெறும் முதல் சர்வதேச போட்டியும் இதுவாகும். முன்னதாக இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையைப் படைத்திருந்தார்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளின் மைதானங்களின் இடமாற்றத்தையும் பிசிசிஐ அறிவிக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்டபடி, முதல் டி20 போட்டியை நடத்த திட்டமிடப்பட்ட சென்னை மைதானத்தில், இப்போது இரண்டாவது டி20 போட்டியை நடத்தும், அதே நேரத்தில் கொல்கத்தா மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டிக்கு பதிலாக முதல் டி20 போட்டியானது நடைபெறும்” என்று அறிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை