ஐசிசி விருதுகள் 2022: சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியல் வெளியீடு!
2022 ஆம் வருடம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது . இந்த வருடத்தில் நடந்த மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியாக உலகக்கோப்பை டி20 பார்க்கப்படுகிறது . 2022 ஆம் வருடம் டி20 உலக கோப்பை நடைபெற இருந்ததால் எல்லா அணிகளும் அதிகமான அளவில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடின .
சென்ற ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கிய வருகிறது . அதன்படி இந்த ஆண்டிற்கான சிறந்த டி20 வீரர்கள் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது . இந்த ஒரு வருடத்தில் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் இருந்து சிறந்த நான்கு வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் அதிலிருந்து ஒரு வீரர் இந்த ஆண்டின் சிறந்த டி20 வீரராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சென்ற ஆண்டு இந்த விருதை பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் தட்டிச் சென்றார் . இவர் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு வருடத்தில் 2,036 ரன்கள் சேர்த்து இருந்தார் . இவரது சராசரி 56.55 ஆகும் . ஒரே வருடத்தில் 2000 ரண்களைக் கடந்த முதல் டி20 பேட்ஸ்மேன் இவர்தான்.
இந்த வருடத்தின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . அதில் இந்தியாவின் சூரியகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண் மற்றும் ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யார் இந்த வருடத்திற்கான ஐசிசி டி20 கிரிக்கெட் ஆக முடிசூட போகிறார் என்பது விரைவில் தெரியவரும் .
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருமே இந்த ஆண்டின் டி20 கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர் . இந்தியாவின் சூரியகுமார் யாதவ் இந்த ஒரு வருடத்தில் மட்டும் இரண்டு சதங்கள் உட்பட 1,164 ரன்கள் குவித்துள்ளார் . இவரது சராசரி 46 ஆகும் . பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இந்த ஆண்டு டி20 போட்டிகளில் 1,016 ரண்களை சேர்த்துள்ளார். இவரது சராசரி 44 .
ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராஜா 768 ரண்களையும் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் . மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சாம் கரன் உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி ஐசிசி டி20 உலக கோப்பையின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .