போட்டி எங்கு நடந்தால் என்ன? உங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்துங்கள் - ரவி சாஸ்திரி!

Updated: Sat, Jun 03 2023 22:40 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று அதில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வருகிற ஜூன் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

விமர்சனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்து பல்வேறு கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நடத்தி வருகின்றனர். அதில் எந்த அணி பலம்மிக்கது? யார் பைனலில் வென்று சாம்பியன் பட்டம் வெல்வார்? இந்திய அணிக்கு யார் சிறப்பாக செயல்படுவார்? என்கிற ஏராளமான கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் பைனல் இங்கிலாந்தில் நடப்பதால், ஆஸ்திரேலிய அணி இம்முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்னும் கருத்துக்களும் வந்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “போட்டி எங்கு நடந்தால் என்ன? உங்களது போராட்ட குணத்தை வெளிப்படுத்துங்கள். இருப்பினும் குறைந்தபட்சம் லக் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதற்காக நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்று சொல்லவில்லை. அனைத்தும் ஒரு சேர அமைய வேண்டும். நான் 3-4 வருடங்களாக சொல்லி வருகிறேன். இது ஐசிசி கோப்பைகளை வெல்லக்கூடிய அணி. கடந்த சில பைனல்கள் இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை என்பதால் பலரும் பலவிதமாக பேசிக் கொண்டனர். அதை கருத்தில் கொள்ளாது, உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்.

இம்முறை இங்கிலாந்தில் நடைபெறுவதால் பலரும் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கூறுகின்றனர். இதற்கு காரணம் இங்கிலாந்தில் இந்திய அணி செயல்பட்ட விதம் தான். இது ஒரு போட்டி மட்டுமே. ஆகையால் இதில் ஆட்டம் எந்த பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம். சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினால் போதும். 

ஒரு சில தவறுகள் ஆஸ்திரேலியா அணியை பாதிக்கும். அதே நேரம் இந்திய அணியும் தவறுக்கு இடம்கொடுக்க கூடாது. அது பாதகமாக அமையலாம். ஆனால் இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அழுத்தங்களை கையாண்டு விளையாட கூடியவர்கள். நான் பயிற்சியாளராக இருந்தபோது இருந்த அணி இப்போதும் இருக்கிறது. ஆகையால் இந்த அணியை கட்டாயம் ஐசிசி கோப்பைகளை வெல்லக்கூடியது. வென்று காட்டுவார்கள்” என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை