பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு, அந்த அணியின் ஜாஸ் பட்லர் (30) மற்றும் டேவிட் வில்லே (21) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 110 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் பும்ராஹ் 6 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 76* ரன்களும், ஷிகர் தவான் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலகுவாக இலக்கை எட்டிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றியின் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது. ஆஸ்திரேலிய அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.