ரஹானே, புஜாரா இல்லாததே தோல்விக்கு காரணம் - ஹர்பஜன் சிங்!

Updated: Fri, Dec 29 2023 20:24 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாத இந்திய அணியினர் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்டனர்.

முன்னதாக இந்த போட்டியில் பேட்டிங் துறையில் 2 இன்னிங்ஸிலும் ஒருமுறை கூட 300 ரன்கள் அடிக்க முடியாத அளவுக்கு சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்த அதே பிட்ச்சில் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 2வது இன்னிங்ஸில் அதை விட மோசமாக விளையாடி 131 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

அதிலும் குறிப்பாக கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர்த்து ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில் போன்ற பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்காவின் எக்ஸ்ட்ரா பவுன்ஸை சமாளிக்க முடியாமல் திண்டாடினார்கள். இந்நிலையில் சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்தக்கூடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை கழற்றி விட்டது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர்,“அஜிங்கிய ரஹானேவை தேர்வு செய்யவில்லை. புஜாராவை காரணமின்றி கழற்றி விட்டீர்கள். இந்த 2 வீரர்களும் உலகின் பல்வேறு இடங்களில் நிறைய ரன்கள் அடித்துள்ளனர். நீங்கள் முந்தைய புள்ளி விவரங்களை புரட்டிப் பார்த்தால் விராட் கோலிக்கு நிகராக புஜாராவும் இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். 

இருப்பினும் புஜாரா ஏன் கழற்றி விடப்பட்டார் என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் நம்மிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவை விட சிறந்த பேட்ஸ்மேன் இல்லை. அவர் மெதுவாக விளையாடினாலும் உங்களைக் காப்பாற்றி விடுவார். அவராலேயே இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் வென்றது. இப்போட்டியில் 3 நாட்களிலும் இந்தியா ஒரு தருணங்களில் கூட சிறப்பாக செயல்பட்டதாக தெரியவில்லை. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 245 ரன்கள் அடித்ததற்கு ராகுலுக்கு நன்றி சொல்ல வேண்டும். 2வது இன்னிங்ஸில் விராட் கோலி எடுத்த ரன்களை கழித்தால் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் செயல்பாடுகளிலேயே போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை