IND vs PAK, Asia Cup 2023: கோலி, ராகுல் அபார சதம்; ரன்குவிப்பில் இந்திய அணி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு நகரில் தொடங்கிய சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கியமான போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஏற்கனவே இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெளியான வானிலை அறிக்கையில் போட்டியின் போது மழை குறுக்கிடும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டேவில் போட்டியை நடத்த வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கையை வைத்திருந்தது.
அதோடு ரசிகர்களும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியினை முழுமையாக காண வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து இருந்ததால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான ரிசர்வ் டேவை (செப்டம்பர் 11) அறிவித்திருந்தது. அந்த வகையில் செப்டம்பர் 10-ஆம் தேதி போட்டி மழையால் தடை பட்டால் செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றைய போட்டி ஆரம்பித்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 24.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்திருந்த வேளையில் மழை பெய்ததால் மீண்டும் போட்டி நடைபெற சாத்தியமில்லாமல் போனது. அதன் காரணமாக இன்று போட்டி கைவிடப்பட்டதாகவும் இன்று ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று போட்டி தொடங்கி 24.1 ஓவர்கள் வரை இந்திய அணி விளையாடி விட்டதால் சில மணி நேரங்கள் காத்திருந்த நடுவர்கள் மைதானத்தின் தன்மையை சோதித்தனர். ஆனால் மீண்டும் இன்று போட்டி நடைபெற வாய்ப்பே இல்லை என்பதால் போட்டி இன்று நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி 8 ரன்களுடனும், கேஎல் ராகுல் 17 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.
இருவரும் களத்தில் நங்கூரம் போல் நின்றதுடன் அதிரடியாக விளையாடி அணியின் ஸகோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 250 ரன்களை தாண்டியது. அதன்பின் இருவரும் இணைந்து சரமாரியாக பவுண்டரிகளை விளாசித்தள்ள பாகிஸ்தான் வீரர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
இதில் காயத்திலிருந்து மீண்டு அணியில் இடம்பிடித்த கேஎல் ரகுல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் ரன்மெஷின் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 47ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தது.
இதில் விராட் கோலி 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 122 ரன்களையும், கேஎல் ராகுல் 12 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 111 ரன்களையும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷஹீன் அஃப்ரிடி, ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.