இங்கிலாந்தை சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்து அசத்திய இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து மகளிர் அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்தது.
முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அபார வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் பின்வரிசையில் தீப்தி சர்மா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ஸ்மிருதி மந்தனா 50 ரன்களுக்கும், தீப்தி ஷர்மா 68 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மற்ற அனைவருமே சொதப்பியதால் இந்திய அணி வெறும் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 170 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் பவுலிங்கில் சரணடைந்தது. அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 43.3 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிலும் ஆட்டத்தின் 44ஆவது ஓவரை வீசிய தீப்தி சர்மா, அதிரடியாக விளையாடி வந்த சார்லோட் டீனை ரன் அவுட் (மான்கட்) செய்து அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார். இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.