பயிற்சி ஆட்டம்: மேற்கு ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி!
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி 10 நாள்களுக்கு முன்னரே ஆஸ்திரேலியாவுக்கு சென்று பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது.
அதன்படி இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி என 3 வீரர்களும் பேட்டிங் செய்யவில்லை. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், 2ஆவது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனாக ராகுல் செயல்பட்டார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆர்ஷ்தீப் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர்பிளே முடிவில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 54 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியின் ஹாப்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
டி ஆர்சி ஷார்ட் தன் பங்கிற்கு அரைசதம் விளாச சிறப்பாக விளையாடிய ஹாப்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்சல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 13 ஓவர் முடிவில் மேற்கு ஆஸ்திரேலிய அணி 125 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
தமிழக வீரர் அஸ்வின் 17ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 18ஆவது ஓவரில் ஆர்ஷ்தீப் 6 ரன்களை விட்டு கொடுக்க, புவனேஸ்வர் குமார் 19ஆவது ஓவரில் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். எனினும் 20ஆவது ஓவரில் ஹர்சல் 15 ரன்களை வழங்கினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மேற்கு ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், ஹர்சல் 2 விக்கெட்டும்,ஆர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது . தொடக்க வீரராக ராகுல், ரிஷப் பந்த் ஜோடி களமிறங்கியது. இதில் பந்த் 9 ரன்களில் வெளியேற, தீபக் ஹூடா 6 ரன்களை மட்டுமே சேர்த்தார். ஆல் ரவுண்டர் ஹ்ர்திக் பாண்டியா 2 சிக்சர்களை பறக்கவிட்டார். எனினும் அவர் 17 ரன்களில் வெளியேறினார். அக்சர் பட்டேலால் 2 ரன்கள் மட்டுமெ எடுக்க முடிந்தது.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்ததால், நிதானமாக விளையாடும் நிலைக்கு ராகுல் தள்ளப்பட்டார். அதன்மூலம் 45 பந்துகளில் தான் ராகுல் அரைசதம் கடந்தார். அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் 10 ரன்களில் வெளியறினார்.
அதன்பின் ராகுல் அதிரடியை காட்டி தொடர்ந்து 2 சிக்சர்களை விளாச இந்திய அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 55 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் மேற்கு ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய அணியின் இத்தோல்வியானது ரசிகர்களை பெறும் ஏமாற்றமளித்துள்ளது.