உலகக்கோப்பை அணியிலிருந்து அக்ஸர் படேல் நீக்கம்; மாஸ் கம்பேக் கொடுத்த அஸ்வின்!
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இறுதி அணியை எல்லா அணிகளும் அறிவிப்பதற்கான கடைசி நாள் இன்று. இன்றைய நாள் இரவு 12 மணி வரைக்கும் அதற்கான நேரம் இருந்தது. இந்த நிலையில் உலகக் கோப்பைக்கான இறுதி அணியை அறிவிக்காத அணிகளாக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இருந்து வந்தன.
ஆஸ்திரேலியா அணி இன்று தனது 15 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை அறிவித்தது. அந்த அணியில் ஒரே ஒரு பிரதான சுழற் பந்துவீச்சாளராக ஆடம் ஸாம்பா மட்டும் இடம் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் இந்திய அணி தமது உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமான உலகக் கோப்பை இறுதி அணியை எப்பொழுது அறிவிக்கும் என்று இந்தியர்கள் தாண்டி கிரிக்கெட் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றவாறு உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி இந்திய தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆசியக் கோப்பை தொடரின் போது உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு மட்டும் இருக்கிறது. பலரும் ஷர்துல் தாக்கூர் நீக்கப்படுவாரா என்று எதிர்பார்த்தது போல ஏதும் நடைபெறவில்லை. தொடர்ந்து அவர் அணியில் நீடித்து வருகிறார். ஹர்திக் பாண்டியாவுக்கான ஒரு மாற்று தேவையாக அவர் எப்பொழுதும் அணியில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் காயம் அடைந்த அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக, பலரும் எதிர்பார்த்து வந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். இவர் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.