IND vs SL, Asia Cup 2023: மேஜிக் நிகழ்த்திய குல்தீப்; இலங்கையை பந்தாடியது இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் 4ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோஹித் சர்மா தனது 51ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுப்பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில், துனித் வல்லாலகே வீசிய முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த விராட் கோலி 3 ரன்களிலும், 7 பவுண்டரி 2 சிக்சர்கள் என 53 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மாவும், துனித் வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் இஷன் - கேஎல் ராகுல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 ரன்களில் இஷான் கிஷன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 39 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுலும் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் துனித் வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் துனித் வெல்லாலகே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் 5 விக்கெட் ஹாலை பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து சரித் அசலங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த அக்ஸர் படேலும் 26 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், சரித் அசலங்கா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிச் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான திமுத் கருணரத்னேவும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமா 17, சரித் அசலங்க 22, தசுன் ஷனகா 9 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த தனஞ்செயா டி சில்வா - துனித் வெல்லாலகே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின் 41 ரன்கள் எடுத்திருந்த தனஞ்செய டி சில்வா விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதிஷா பதிரானா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துனித் வல்லாலகே 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்களைச் சேர்த்த போதும் இலங்கை அணியால் இலக்கை எட்டமுடியவில்லை.
இதனால் இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.