ஐசிசி தரவரிசை: டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா; ஒருநாள், டி20 தரவரிசையில் முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்தாண்டின் சர்வதேச கிரிகெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி சர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல் ஐசிசியின் சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறது. அதன்படி 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தையும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்தையும், 112 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் இடத்திலும், 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 4ஆம் இடத்தையும், 101 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.
மேற்கொண்டு டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இதில் 264 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 257 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து அணி 252 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளான. மேலும் இப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு இடங்கள் முன்னேறி 250 புள்ளிகளுடன் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னதாக இந்திய அணி, ஐசிசியின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த நிலையில், தற்போது டெஸ்ட் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது. இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதுபோக அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், அத்தொடருக்கு பின் இப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.