இந்திய அணி மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுப்பிடிப்பது அவசியம் - மிதாலி ராஜ்!

Updated: Tue, Jul 30 2024 12:10 IST
Image Source: Google

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரானது சமீபத்தில் நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 60 ரன்களையும், ரிச்சா கோஷ் 30 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரமா ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இதில் சமாரி அத்தபத்து 61 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 69 ரன்களையும், கவிஷா தில்ஹாரி 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது. 

இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி ஆசிய கோப்பை தொடர் வரலாற்றில் தங்கள் முதல் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப்படைத்தது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஹர்ஷிதா சமரவிக்ரமா ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து தொடர் நாயகி விருதையும் வென்றனர். 

இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எதிர்வரும் அக்டோபரில் இந்திய அணி மிகப்பெரிய தொடரான மகளிர் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. ஆனால் இந்த தொடருக்கான இந்தியா அணி தங்களுடையை மூன்றாம் வரிசை வீராங்கனையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில் இந்திய அணி இன்னும் நம்பர் 3 வரிசைக்கான சரியான பேட்டரைத் தேடிவருகின்றனர். இந்திய அணி இதற்கு முன்னதாக தயாளன் ஹேம்லதாவையும், உமா செத்ரி ஆகியோரையும் முயற்சித்துள்ளனர். ஆனால், ஷாஃபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் சிறப்பான தொடக்கத்தை வழங்கிவரும் நிலையில், அதன்பின் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு வீராங்கனை இந்திய அணி கொண்டிருக்க வேண்டும். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணிக்கு எனது செய்தி என்னவென்றால், நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், கடினமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். வங்கதேசத்தில் எங்களுக்கு ஏற்ற சூழ்நிலைகள் உள்ள இடம் என்பதால், உங்கள் அனைவருக்கும் சிறந்த வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். எங்களின் பலம் எப்பொழுதும் சுழற்பந்து வீச்சாளர்களாகவே இருந்து வருகிறது, இம்முறை எங்கள் பேட்டிங்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை