பீல்டிங்கில் பிரமிக்க வைத்த விராட் கோலி; வைரல் காணொளி!

Updated: Mon, Oct 17 2022 14:44 IST
Image Source: Google

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி போட்டி பிரிஸ்பேனின் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ராகுல் 57 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்னும், கோலி 19 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் பின்ச் ஆகியோர் இறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 35 ரன்களுக்கு அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஸ்மித் 11 ரன்னுக்கும், மேக்ஸ்வெல் 23 ரன்னுக்கும், ஸ்டோய்னிஸ் 7 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதற்கிடையில் பின்ச் அரைசதம் அடித்தார். நிலைத்து நின்று ஆடிய அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்ந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், சஹால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்சல் பட்டேல், முகமது ஷமியை போல விராட் கோலியும் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. 

பயிற்சி போட்டி என சாதரணமாக இல்லாமல், பீல்டிங்கில் முழு வீரியத்துடன் செயல்பட்ட விராட் கோலி, 19வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட்டை துல்லியமான த்ரோவால் ரன் அவுட் செய்ததோடு கடைசி ஓவரில் ஒற்றை கையில் ஒரு மிரட்டல் கேட்ச்சும் பிடித்து அசத்தினார். விராட் கோலி இந்த கேட்ச்சை தவறிவிட்டிருந்தால் போட்டியில் நிச்சயம் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றிருக்கும். 

 

விராட் கோலி பிடித்த கேட்ச்சை பார்த்து டேவிட் வார்னர், டிம் டேவிட் என பல ஆஸ்திரேலிய வீரர்களும் பிரமித்து போனது காணொளியில் தெளிவாக தெரிந்தது. இந்த காணொளியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை