SA vs IND: விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ரபாடா!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருந்தன.
இந்நிலையில் இந்த தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று கேப்டவுன் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தங்களது முதல் இன்னிங்சில் இந்திய அணி 77.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே அடித்தது.
அதில் கேப்டன் விராட் கோலி மட்டும் தனி ஒருவராக போராடி 201 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 79 ரன்கள் குவித்து 9-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு யாரும் சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்காததால் அவர் இறுதியில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிஸோ ரபாடா விராத் கோலியின் பேட்டிங் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டியில் டாஸ் வென்று நாங்கள் விளையாட விரும்பினோம். ஆனால் தற்போது இந்தியாவை 223 ரன்களுக்குள் சுருட்டி விட்டோம்.
அதே நேரத்தில் நாங்கள் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த மைதானத்தில் ரன் குவிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும் என்றாலும் இந்த மைதானத்தில் கூட விராட் கோலி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு, சூழ்நிலையை புரிந்துகொண்டு விளையாடுவதில் அவருக்கு நிகர் யாருமில்லை” என்று தெரிவித்தார்.