தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு?

Updated: Thu, May 12 2022 15:07 IST
Image Source: Google

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. 

ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரு ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கு சேட்டன் சர்மா தலைமையிலான குழு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “தென் ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்படலாம். அவர் அதிகமான கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி வருகிறார். கரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாள் இருந்துள்ளார். கோலி மற்றும் சீனியர் வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கப்படுவது கொள்கை முடிவாகும்” என்று தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்கா தொடரில் ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் விராட் கோலி இங்கிலாந்து பயணத்தில் புத்துணர்ச்சியுடன் களம் இறங்குவார். இந்திய அணி ஜூன், ஜூலையில் மூன்று டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டெஸ்டில் ஆடுகிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். 12 ஆட்டங்களில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 19.63 ஆகும்.

விராட் கோலிக்கு தற்போது ஓய்வு தேவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை