ஆசிய கோப்பை 2023: தொடரும் மழை; ரிசர்வ் டேவுக்கு மாறிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி!

Updated: Sun, Sep 10 2023 20:56 IST
ஆசிய கோப்பை 2023: தொடரும் மழை; ரிசர்வ் டேவுக்கு மாறிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி! (Image Source: Google)

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பையின் முதல் லீக் போட்டி மழையால் முடிவு எட்டப்படாமல் நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இன்றையப் போட்டியில் ஏற்கனவே கணித்தது போன்று மழையால் தற்போது தடைப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக இலங்கையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசியக் கோப்பை தொடர் அதன் சுவாரசியத்தை இழந்து வருகிறது. மற்றப் போட்டிகளைக் காட்டிலும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு ரசிகர்களிடையே எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு இருக்கும். முதல் லீக் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இன்றைய போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித்  சர்மா மற்றும் ஷுப்மன் கில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தனர். ரோஹித்  சர்மா 56  ரன்களுக்கும், ஷுப்மன் கில் 58 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

தற்போது விராட் கோலி 8 ரன்களுடனும், கேஎல்ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தொடர் மழை காரணமாக தடைபட்ட இப்போட்டி, 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் மீண்டும் மழை தொடங்கிய காரணத்தால் இன்றைய போட்டி நடைபெற வாய்ப்பில்லாமல் போனது.

ஏற்கெனவே இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்ட காரணத்தால், மீதமுள்ள போட்டி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நாளையும் மழையால் ஆட்டம் தடைப்பட்டால், போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.    

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை