இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டி
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 48.2 ஓவர்களில் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களாக
களமிறங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இணை நிதானமாக நின்று ஆடி
ரன்களை குவித்தனர். இந்த இணை 5 ஓவர்களில் 31 ரன்கள், 10 ஓவர்களில் 65
ரன்கள் என சீராக ரன்னின் வேகத்தை அதிகரித்து வந்த நிலையில் 14
ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ஒருநாள் போட்டிகளில் சச்சின் - கங்குலி (21
முறை) இணைக்கு அடுத்தப்படியாக, அதிக முறை 100 ரன்களை சேர்த்த
பாட்னர்ஷிப் என்ற மைல்கல்லை ரோஹித் - தவான் (17 முறை) இணை
எட்டியுள்ளது. இந்த போட்டியில் தவான் 42ஆவது ஒருநாள் அரை சதத்தை
பூர்த்தி செய்தார்.

Advertisement

இதனையடுத்து நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித்
37(37) ரன்களுக்கு, அதில் ரஷித் சுழலில் சிக்கி போல்டானார். அடுத்த
களமாடிய கோலி நிதானம் காட்ட, தவான் அடித்து ஆடி வந்தார். அப்போது
ரஷித் வீசிய 16ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 67 (56) ரன்னில்
தவான் வெளியேறினார்.

அடுத்த ஓவரை வீச வந்த மொயின் அலி தன் மிரட்டலான ஆஃப்-பிரேக்
டெலிவரி மூலம், கேப்டன் விராட் கோலியையே நிலைக்குலைய வைத்தார்.
அப்பந்தை சரியாக நோட்டமிடாத கோலி, அதை ஆஃப் திசையில் விரட்ட
நினைத்து ஸ்டம்ஸை திறந்து ஆட, பந்து லெக் ஸ்டம்பை பதம் பார்த்தது.

கடந்த போட்டியில் சதம் அடித்து மிரட்டிய ராகுல், இப்போட்டியில் 7(18)
ரன்னில் லிவிங்ஸ்டனிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து
இறங்கிய ஹர்திக் பாண்டியா - ரிஷப் பந்த் இருவரும் விக்கெட்டை
விட்டுக்கொடுக்காமல் கவனமாக ஆடினர். பந்த் 44 பந்துகளில் தனது
மூன்றாவது அரை சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து இருவரும் அதிரடியாக ஆடிவந்த நிலையில், ரிஷப் பந்த் 36ஆவது
ஓவரில் சாம் கரன் வீசிய பந்தில் பட்லரிடம் கேட் கொடுத்து பெவிலியன்
திரும்பினார். பின், ஹர்திக் பாண்டியாவும் 36 பந்தில் தனது ஏழாவது அரை
சதத்தை பூர்த்தி செய்தார்.

Advertisement

இதன் மூலம் இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில்
மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், ரஷித் 2 விக்கெட்டுகளையும
வீழ்த்தியுள்ளனர்.

இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியின் தொடக்க
வீரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டாவ் இணை புவனேஷ்வர் குமார்
ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் களமிறங்கிய மாலன், ஸ்டோக்ஸ் இணை நிலைத்து ஆடி
அணிக்கு நம்பிக்கை அளித்தனர். இதில் அதிரடியாக விளையாடிய
மாலன் அரைசதம் கடந்த கையோடு அட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து
ஸ்டோக்ஸ் 36 ரன்களில் நடையைக் கட்டினர். அதன்பிறகு வந்த
வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணியின்
வெற்றி உறுதியானது.

Advertisement

இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய சாம் கரன் அரைசதம்
கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் கடைசி ஓவரில் 14
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் கடைசி
ஓவரை வீசிய நடராஜன் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றியைத்
தேடித்தந்தர்.

இதன் மூலம் 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை
இழந்து 322 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள்
வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, மூன்று போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News