BANW vs INDW, 4th T20I: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Updated: Mon, May 06 2024 20:08 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா மற்றும் தயாளன் ஹேமலதா இருவரும் தலா 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.  அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி 39 ரன்களைச் சேர்த்தார்.

அவருக்கு துணையாக விளையாடிய ரிச்சா கோஷ் 24 ரன்களையும், சாஜனா 8 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 14 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் மழை நீடித்த காரணமாக இப்போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச மகளிர் அணிக்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் முர்ஷிதா கதும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் 21 ரன்களுக்கும், ருபாய ஹைதர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா, சொர்மா அக்தர், ரிடு மோனி, ரபேயா கான் என அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஷொரிஃபா கதும் 11 ரன்களையு, நஹிதா அக்தர் 2 ரன்களையும் சேர்த்த நிலையிலும் வங்கதேச அணி 14 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை