IND vs AUS: இந்தூர் பிட்ச் குறித்து பேட்டிங்க் பயிற்சியாளர் ஓபன் டாக்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பேட்டிங்கிறதுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என கணிக்கப்பட்டது. இதனால் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி விளையாடிய போது ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 47 ரன்கள் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆடுகளம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், “ஆடுகளம் மிகவும் சவாலாக இருந்தது உண்மைதான். நாங்கள் நினைத்ததை விட பந்து நன்றாக திரும்பியது.
ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்திருக்கலாம். இதனால் தான் காலை வேளையில் பந்து நன்றாக திரும்பியது. நாங்கள் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்கலாம். எங்கள் பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட் ஆடி ஆட்டம் இழந்ததாக நான் நினைக்கவில்லை. ஏதேனும் ஒரு நாள் இப்படி சொதப்பலாம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இதுபோன்று சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட விரும்புகிறார்கள். ஏனென்றால் இதுதான் எங்களுடைய பலம். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் மோசமானதாக இல்லை.
நாங்கள் நினைத்ததை விட ஆடுகளும் வித்தியாசமாக செயல்பட்டது. ஆட்டத்தின் முதல் நாள் பந்து இப்படி திரும்பும் என்று நாங்கள் கணிக்கவில்லை. இதற்காக ஆடுகளத்தின் பராமரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்ட நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் 14 நாட்களுக்கு முன்னால் தான் இந்தூரில் போட்டி மாற்றப்பட்டது. நிறைய ரஞ்சிப் போட்டிகள் இங்கு நடைபெற்றது. கடைசி நேரத்தில் தான் அவர்களுக்கு ஆடுகளத்தை தயாரிக்க நேரம் கிடைத்தது. இதனால் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு போதிய நேரம் கிடைத்திருக்காது.
காலையில் ஆடுகளம் கடினமாக இருந்த நிலையில் போகப் போக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறியது. அது எப்படி நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் என்னை விட களத்தில் நின்று விளையாடிய பேட்ஸ்மேன்கள் சொன்னால் தான் அது சரியாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் தான் விளையாடுகிறார்கள். எனக்கு தெரிந்து ஆடுகளும் மிகவும் தோய்வாக மாறிவிட்டது. காலையில் இருந்தது போல் பந்து நன்றாக திரும்பவில்லை. இது போன்ற ஆடுகளத்தில் நமது தற்காப்பு ஆட்டத்தை நம்பி விளையாட வேண்டும்.
ஏதேனும் ஒரு மோசமான பந்தை அடித்து ஆடி ரன்களை சேர்க்க வேண்டும். இது போன்ற கடின ஆடுகளத்தில் உங்களால் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ அவ்வளவு போராட வேண்டும். எங்கள் அணி வீரர்களுக்கு இது சிறந்த நாளாக அமையவில்லை. புஜாரா பந்தின் லென்த்தை தவறாக கணித்து விட்டார். அவர் பந்து நேராக வரும் என நினைத்தார். ஆனால் அது திரும்பியது .இதுபோன்ற தவறு பேட்ஸ்மேன்களுக்கு நடக்கலாம். ரோஹித் சர்மாவுக்கும் பேட்டிலிருந்து இருந்து எப்போதும் ரன் வரும். ஏதேனும் ஒரு நாள் இப்படி ஆகலாம். அவருக்கு இன்று அது நடந்து விட்டது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியதில் இருந்து உள்ளூரில் நடைபெறும் போட்டியை வெல்ல வேண்டும் என அனைத்து அணிகளும் விரும்புகிறது.
இதற்காக அவர்களுக்க விருப்பம் போல் ஆடுகளம் அமைத்துக் கொள்கிறார்கள். ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது பெரிய பிரச்சனை கிடையாது. எப்படியும் அவர்கள்தான் கடைசி இன்னிங்ஸில் விளையாட வேண்டும். நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் சுருட்ட நினைக்கிறோம். நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.