மழையால் உள்ளரங்கில் பயிற்சிகளை மேற்கொள்ளும் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் மோதவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை இரவு ட்ரினிடாட் நகரத்தில் தொடங்கவுள்ளது.
இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, பும்ரா, விராட் கோலி, ரிஷப் பந்த் உள்ளிட்டோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷிகர் தவான் தலைமையிலான இளம் படையை வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக சமீபத்தில் அந்நாட்டிற்கு சென்றடைந்த வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பயிற்சி தொடங்கியவுடனே சோதனை வந்துள்ளது. போட்டி நடைபெறும் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரத்தில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை குறுக்கிட்டு கொண்டே உள்ளது. இன்று காலையும் மழைப்பொழிவு குறையாத காரணத்தால் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறைகளிலேயே தங்க வேண்டிய சூழல் உருவானது.
எனினும் நாளை போட்டி இருப்பதால், முற்றிலும் மூடப்பட்ட இடத்தில் இந்திய வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இஷான் கிஷான், சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு பெரிய ஷாட்களை மட்டும் அடிக்காமல் மற்ற பேட்டிங் பயிற்சிகளை டிராவிட் வழங்கி வருகிறார். இதே போல பந்துவீச்சுக்கும் தீவிர பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
மழை பாதிப்பு குறித்து பேசியுள்ள சுப்மன் கில், “இங்கிலாந்தில் இருந்து நேராக வந்துள்ளதால், வலைப்பயிற்சி இருந்தால் சற்று சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் மழை குறுக்கிட்டு ஏமாற்றம் தந்துள்ளது. எனவே மூடப்பட்ட இடத்தில் பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சி எடுத்து வருகிறோம். எங்களுக்கு பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.