ஆசிய கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தானிடையே நீடிக்கும் இழுபறி!

Updated: Fri, Mar 24 2023 13:16 IST
Indian team will play its Asia Cup 2023 matches outside of Pakistan! (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன்  வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடர் ஒருநாள் போட்டி முறையில் நடத்தப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் ஆசிய கிரிக்கெட் தலைவருமான ஜெய்ஷா தெரிவித்தார். ஆசிய கோப்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டியை நடத்தாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. சில நாட்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே கூட்டம் நடந்தது. இதில் ஆசிய கோப்பை போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா மோதும் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தாமல் பொதுவான இடத்தில் நடத்துவதற்கான யோசனை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், ஓமன் ஆகியவற்றில் ஏதாவது நாட்டில் இந்தியா- மோதும் போட்டிகள் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. பொதுவான இடம் பற்றிய முடிவு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த ஆட்டமும் பொதுவான இடத்திலேயே நடத்தப்படும். இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் நடைபெற உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து, இந்தியா மோதும் போட்டிக்கான பொதுவான இடம் குறித்து தேர்ந்தெடுக்கப்படலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை