இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று
(மார்ச் 26) புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்,
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இணை களமிறங்கியது.
கடந்த போட்டியில் சதத்தை நெருங்கிய தவான், இன்று 4 ரன்களிலேயே ரீஸ் டோப்லி பந்தில்
நடையைக் கட்டினார். சிறிதுநேரம் தாக்குப்பிடித்த ரோஹித் சர்மா 25 ரன்கள் எடுத்திருந்த
நிலையில் சாம் கரன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

Advertisement

இதனால் இந்தியா 37 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கோலி - ராகுல்
இணை, ரன் வேகத்தைச் சீராக அதிகரித்தது. இங்கிலாந்து கேப்டன் பட்லர், ரஷித், மொயின் அலி
என இரு சுழற்பந்துவீச்சாளர்களையும் அடுத்தடுத்து பயன்படுத்தி இந்திய அணியை அச்சுறுத்த,
கோலியும் ராகுலும் நிதானமாக சுழலை எதிர்கொண்டு ஆடினர்.

கோலி 61 பந்துகளிலும், ராகுல் 66 பந்துகளிலும் அரை சதத்தைக் கடந்தனர். இப்போட்டியில்,
மூன்றாவது வீரராக களமிறங்கி குறைந்த (190) இன்னிங்ஸில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற
சாதனையையும் விராட் கோலி படைத்தார். தொடர்ந்து அதிரடி காட்டிவந்த இந்த ஜோடியை
ரஷித் உடைத்தார். விராட் கோலி 66 (79) ரன்களில் பட்லரிடம் கேட்ச்சாகி பெவிலியன் திரும்ப,
அடுத்ததாக வந்த ரிஷப் பந்த் அதிரடி காட்டினார்.

 

அதன்பின் ரிஷப் பந்த் வந்தவுடன் ராகுல் தன் சதத்தை நோக்கி சீறிப்பாய்ந்தார். மறுமுனையில்
ரிஷப்பும் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்க, 28 பந்துகளில் தன் இரண்டாவது ஒருநாள்
அரை சதத்தை அடித்து மிரட்டினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ராகுலும் ஒருநாள் போட்டிகளில் தனது ஐந்தாவது
சதத்தை கடந்தார். பின், டாம் கரன் பந்தில் டோப்லியிடம் கேட்ச் கொடுத்து 108 (7 பவுண்டரி, 2
சிக்ஸ்) ரன்களில் வெளியேறினார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் ரிஷப் பந்தின் அதிரடிக்கு ஈடுகொடுத்தார். சாம்
கரன் வீசிய 46ஆவது ஓவரில் ஹர்திக் 2 சிக்சரும், பந்த் 1 சிக்சரும் என 21 ரன்களைக் குவித்து
மிரட்ட, இந்திய அணி 300 ரன்களை நோக்கி சீறிப்பாய்ந்தது.

பின் இறுதி ஓவர்களில் ரிஷப் பந்த் 77 (2 பவுண்டரி, 7 சிக்சர்) ரன்களோடும், பாண்டியா 35 (1
பவுண்டரி, 4 சிக்சர்) ரன்களோடும் நடையைக்கட்ட இந்தியா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்
இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் டாம் கரன், டோப்லி தலா 2
விக்கெட்டுகளையும்; ரஷித், சாம் கரன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து 337 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த
அணியின் தொடக்க வீரர்களான ஜேஸன் ராய், பேர்ஸ்டோவ் இணை இந்திய அணியின்
பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். ராய் தொடக்கத்தில் அதிரடியாக ஆட, அவருக்கு
பேர்ஸ்டோவ் ஒத்துழைப்பு கொடுத்தார். பின்னர் பேர்ஸ்டோவும் வான வேடிக்கை காட்டினார்.

Advertisement

ராய் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்தார். அவர் களத்திற்கு வந்தது
முதலே சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார்.

சதம் அடித்த பேர்ஸ்டோவ் 112 பந்துகளில் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 7 சிக்ஸர்,
11 பவுண்டரிகள் விளாசினார். மறுமுனையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட
ஸ்டோக்ஸ் 52 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில்
ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.

இருப்பினும் இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 337 ரன் எடுத்து 39
பந்துகள் மீதமிருக்க அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News