SA vs IND: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 12, திலக் வர்மா டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் உடன் இணைந்து விளையாடினார்.
ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் கடைசி 7 ஓவர்கள் இருக்கும் போது வேகம் எடுத்தார். 55 பந்துகளில் தன் நான்காவது டி20 போட்டி சதம் அடித்தார். அதற்கு அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இந்த சதம் மூலம் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். ரோஹித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு சதம் அடித்து இருக்கின்றனர். அந்த சாதனையை சமன் செய்து சூர்யகுமார் யாதவ் வரலாறு படைத்தார்.
மேலும், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அடிக்கும் முதல் சர்வதேச டி20 சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அவர் சதம் அடித்து இருந்தார். தற்போது வலுவான அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா அவிக்கு எதிராக சதம் அடித்து இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் 57 இன்னிங்க்ஸ்களில் நான்கு சதம் அடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவாக நான்கு சர்வதேச டி20 சதம் அடித்த வீரர்களில் சூர்யகுமார் முதல் இடத்தில் இருக்கிறார். சூர்யகுமார் சதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணியில் கேஷவ் மகாராஜ், லிசாத் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.