இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு லிட்ஃபீல்ட் - அலிசா ஹீலி இணை தொடக்கம் கொடுத்தனர்.  இதில் அலிசா ஹீலி 13 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் லிட்ச்ஃபீல்டுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் அரைசதம் கடந்த கையோடு எல்லிஸ் பெர்ரி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பெத் மூனியும் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதையடுத்து மறுப்பகம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லிட்ச்ஃபீல்ட் 63 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த தஹிலா மெக்ராத் 24 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 2 ரன்களுக்கும், அனபெல் சதர்லேண்ட் 23 ரன்களுக்கும், ஜார்ஜியா 22 ரன்களிலும் என ஆட்டமிக்க, அலனா கிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 சிக்சர்களை விளாசி 28 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சர்மா 10 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்த் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷ்திகா பாட்டியா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷ்திகா பாட்டியா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளமவென உயர்த்தினர். 

இதில் ரிச்சா கோஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுப்பக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிச்சா கோஷ் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 பவுண்டரிகளை விளாசி 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனைத்தொடர்ந்து விளையாடிய தீப்தி சர்மா 24, அமஞ்ஜோத் கவுர் 4, பூஜா வஸ்திரேகர் 8, ஹர்லீன் தியோல் ஒரு ரன்னுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அனபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News