INDW vs AUSW, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்த 23 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - தீப்தி சர்மா இணை அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களில் ரிச்சா கோஷ் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பூஜா வஸ்திரேகர் 9 ரன்களுக்கும், அமஞ்ஜோத் கவுர் 4 ரன்களிலும் என நடையைக் கட்டினர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த தீப்தி சர்மா 30 ரன்களையும், ஷ்ரெயங்கா பாட்டில் 7 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜார்ஜியா வர்ஹாம், அனபெல் சதர்லேண்ட், கிம் கார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
பின் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலிசா ஹீலி ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 20 ரன்களை எடுத்திருந்த பெத் மூனியும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய தஹிலா மெக்ராத் 19 ரன்களுக்கும், ஆஷ்லே கார்ட்னர் 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி - ஃபோப் லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்களையும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது.