INDW vs ENGW, 3rd T20I: ஒயிட்வாஷை தவிர்த்தது இந்திய மகளிர் அணி!

Updated: Sun, Dec 10 2023 23:19 IST
Image Source: Google

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில்  விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் மையா பௌச்சர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான சோபியா டங்க்லியும் 11 ரன்கள் எடுத்த நிலையில் ரேணுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 

அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் ஹீதர் நைட் - எமி ஜோன்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் ஜோன்ஸ் 25, டேனியல் கிப்சன் 0, பெஸ் ஹெத் 1, ஃப்ரெயா கெம்ப் 0, சோபி எக்லெஸ்டோன் 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹீதர் நைட் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சைகா இஷாக், ஷ்ரெயங்கா பாட்டில் தலா 3 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங், அமஞ்ஜோத் கவுர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் மந்தனாவுடன் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பின் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரோட்ரிக்ஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  இருப்பினும் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். 

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய அணி ஏற்கெனவே தொடரை இழந்தாலும், இந்த வெற்றியின் மூலம் ஒயிட்வாஷ் ஆவதை தவிர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை