INDW vs ENGW: ஷஃபாலி அதிரடியால் தொடரை சமன் செய்த இந்தியா!
இந்திய - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் பிரண்ட் வீசிய 3ஆவது ஓவரை எதிர்கொண்ட ஷஃபாலி வர்மா, தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
பின் 20 ரன்கள் எடுத்டிருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மாவும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க திணறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்ப்பில் டேவிஸ், கிளென், ஸ்கைவர், வில்லியர்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டாமி பியூமண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதனால் போட்டி கையை விட்டு சென்றது என ரசிகர்கள் எண்ணிய நேரத்தில் 59 ரன்களை எடுத்திருந்த பியூமண்ட் தீப்தி சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்தவர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, போட்டி மீண்டும் இந்திய அணி பக்கம் வந்தது. இறுதில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி சர்மா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.