நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா பிளிம்மர் 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லாரா டௌனும் 3 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூஸி பேட்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் சோஃபி டிவைனும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். பின் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூஸி பேட்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய புரூக் ஹாலிடேவும் 8 ரன்களுடனும் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேடி கிரீனும் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தா கேப்டன் சோஃபி டிவைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் சோபிக்க தவறினாலும், 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை ராதா யாதவ் 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக தொடங்கிய ஷஃபாலி வர்மா 11 ரன்களுக்கும், யஷ்திகா பாட்டியா 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இந்திய அணி 26 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் ரோட்ரிக்ஸ் 17 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேஜல் ஹஸ்பானிஸ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 15 ரன்களுக்கும், அருந்ததி ரெட்டி 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க இந்திய அணியின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் ராதா யாதவ் - சைமா தக்கூர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். இதில் சைமா தாக்கூர் 29 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராதா யாதவும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இந்திய மகளிர் அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் சோஃபி டிவைன் மற்றும் லியா தஹுஹு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஈடன் கார்சன், ஜெஸ் கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, ஒருநாள் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.