தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 20 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதாவும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர் என 24 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

Advertisement

இதில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா சர்வதெச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீராங்கனை எனும் மிதாலி ராஜின் சாதனையையும் சமன்செய்து அசத்தினார். அதன்பின் 18 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 136 ரன்கள் எடுத்த நிலையில் மந்தனா ஆட்டமிழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தனது 6ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 103 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ரிச்சா கோஷ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்களைச் சேர்த்தது. 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தஸ்மின் பிரிட்ஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய போஷ்க் 18 ரன்களுக்கும், சுனே லூஸ் 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, தென் அபபிரிக்க அணியும் 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் லாரா வோல்வார்ட்டுடன் இணைந்த நட்சத்திர வீரர் மரிஸான் கேப் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியாது. இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய மரிஸான் கேப் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 184 ரன்களைத் தாண்டிய நிலையில், 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 114 ரன்களைச் சேர்த்திருந்த மரிஸான் கேப் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய லாரா வோல்வார்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அவருக்கு துணையாக நதின் டி கிளார்க்கும் அணியின் ஸ்கோரை உயர்த்த, தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் இன்னிங்ஸின் 49ஆவது ஓவரை வீசிய அருந்ததி ரெட்டி முதல் 5 பந்துகளில் பெரிதளவில் ரன்களைக் கொடுக்காமல் இருந்த நிலையில், கடைசி பந்தில் சிக்ஸர் கொடுத்து அந்த ஓவரில் மொத்தம் 14 ரன்களை கொடுத்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், பூஜா வஸ்திரேகர் கடைசி ஓவரை வீசினார்.

அந்த ஓவரில் நதின் டி கிளார்க் பவுண்டரி அடித்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷங்கேஸும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் 12 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 135 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அந்த அணியால் வெற்றியை ஈட்டமுடியவில்லை. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்திரேகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News