இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொட்ரின் முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த சுற்றுப்பயணத்தில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.  இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீராங்கனை உமா சேத்ரி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

அதன்பின் அதிரடியான தொடக்கத்தைப் பெற்ற கேப்டன் லாரா வோல்வார்ட் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை மரிஸான் கேப் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த தஸ்மின் பிரிட்ஸ் - அன்னேக் போஷ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தஸ்மின் பிரிட்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய டிரையானும் 12 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். 

பின்னர் அதிரடியாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய அன்னேக் போஷ் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து நதின் டி கிளார்க் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அன்னரி டெர்க்சன் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷின்ங்கை கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்திரேகர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News