INDW vs SAW, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மந்தனா; தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகள் முடிவில் இந்திய மகளிர் அணி இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வோல்ர்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 61 ரன்கள் எடுத்திருந்த லாரா வோல்வார்ட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தஸ்மின் பிரிட்ஸும் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனையடுத்து களமிறங்கிய மரிஸான் கேப் 7 ரன்களிலும், போஷ் 5 ரன்களிலும், சுனே லூஸ் 13 ரன்களிலும், நதின் டி கிளார்க் 23 ரன்களிலும், ஷங்காசே 16 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக் டி ரிட்டர் 26 ரன்களைச் சேர்க்க தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு வழக்கம் போல் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடிய பிரியா பூனியா 28 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 90 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். முன்னதாக இந்த தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, மறுபக்கம் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19 ரன்களையும், ரிச்சா கோஷ் 6 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 40.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகியாக தீப்தி சர்மாவும், தொடர் நாயகியாக ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டனர்.