இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷஃபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் மூலம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறித்தது.  இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 205 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 149 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் சுனே லூஸ் 65 ரன்களையும், மரிஸான் கேப் 74 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக அந்த அணி 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ராணா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஃபலோ ஆனை தவிர்க்க தவறிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 337 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனை அன்னே போஷ்க் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அதன்பின் இணைந்த கேப்டன் லாரா வோல்வார்ட் - சுனே லூஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனே லூஸ் தனது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதில் இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனே லூஸ் தனது விக்கெட்டை இழந்தார். 

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களைச் சேர்த்தது. இதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை கேப்டன் லாரா வோல்வார்ட் 93 ரன்களுடனும், மரிஸான் கேப் 15 ரன்களுடனும் தொடர்ந்தனர். இப்போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வோல்வார்ட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய முதல் தென் ஆப்பிரிக்க வீராங்கனை எனும் சாதனையைப் படைத்தார். 

அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மரிஸான் கேப் 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டெல்மி டக்கர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து சதமடித்து விளையாடி வந்த கேப்டன் லாரா வோல்வார்ட்டும் 122 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய நதின் டி கிளார்க் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வர, மறுபக்கம் களமிறங்கிய சினலோ ஜஃப்தா, டெர்க்சன், மசபடா கிளாஸ் உள்ளிட்ட வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நதின் டி கிளார் தனது அரைசதத்தை பதிவுசெய்ததுடன், அணியையும் முன்னிலைக்கு கொண்டு சென்றார். இறுதியில் அவரும் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களில் விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 373 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஸ்நே ரானா, தீப்தி சர்மா, ராஜேஷ்வர் கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 37 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 

Advertisement

அதன்பின் இலககி நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஷுபா சதீஷ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபா சதீஷ் 13 ரன்களையும், மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களையும் சேர்க்க இந்திய மகளிர் அணியானது 9.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News